பாட்டவயலில் விதிமீறும் மினி பஸ்; அனுமதி பெறாத சாலையில் இயக்கம்
பந்தலுார்; பந்தலுார் அருகே பாட்டவயல்- அய்யன்கொல்லி வழித்தடத்தில் மினி பஸ் விதி மீறி இயக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் செல்லாத கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், மினி பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. அதில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், இயக்கப்படும் மினி பஸ்களில், சில பஸ்களின் உரிமையாளர்கள் அனுமதி பெறாத மார்க்கத்தில் விதி மீறி இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. அதில், 'மேல் பாட்டவயல், பந்தகாப்பு, கல்பரா, தட்டாம் பாறை, முருக்கம்பாடி, நெல்லியாம்பதி, அய்யன்கொல்லி, நரிக்கொல்லி, அம்பலமூலா, கொட்டாடு,' வழியாக வந்து செல்லும் வகையில் அனுமதி பெற்ற, மினி பஸ், கொளப்பள்ளி, தட்டாம்பாறை, அய்யன்கொல்லி வழியாக விதிமீறி இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூறுகையில், ' இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் இயக்கப்படும் நிலையில், அனுமதி பெறாத மார்க்கத்தில் மினி பஸ் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.