பயிர் சேதங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு 33 சதவீதத்திற்கு மேல் உள்ள சேதத்துக்கு நிவாரணம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், மழை காலத்தில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியுள்ளதாவது: நீலகிரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக, 33 சதவீதத்திற்கு மேல் பயிர் சேதங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்புகளை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதற்காக, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கும் பயிர்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயிரை சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழை நாட்களில், உரம் இடுவது, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது மற்றும் களைக்கொல்லி இடுவதை தவிர்ப்பது அவசியம். நோய் தாக்குதல் பொருளாதார நிலைக்கு மேல் இருப்பின், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்து கொள்வதுடன் பசுந்தாள் உர பயிர்களை அதிகளவில் பயன்படுத்தி, யூரியா டி.ஏ.பி., போன்ற உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் செடிகள், மரங்களை சுற்றி மண் அணைத்தல் ஊன்று குச்சிகளை நட்டு கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.