தேசிய வாக்காளர் தின ஓவிய போட்டி; மாநில அளவில் அரசு பள்ளி மாணவன் முதலிடம்
ஊட்டி; தேசிய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டு தோறும் ஜன., 25ம் தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தாமாக முன்வந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை இளம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் இடையே மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஓவியம் , கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், மாநில அளவிலான ஓவிய போட்டியில் ஊட்டி அருகே துானேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 10ம் வகுப்பு மாணவர் சாய் கிருஷ்ணா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில கவர்னர் ரவி சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டினார். மாநில அளவில் சாதித்த மாணவர் சாய் கிருஷ்ணாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு தெரிவித்தனர்.