நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்
கூடலுார்; கூடலுார் பகுதியில், நேந்திரன் வாழை கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கூடலுார் பகுதியில், நீண்ட காலம் பயன் தரும் தேயிலை, காபி, குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு தவிர குறுகிய கால பயன் தரும் நெல், காய்கறி, இஞ்சி, வாழை பயிரிட்டு வருகின்றனர். இதில், நேந்திரன் வாழை உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும் நேந்திரன் வாழை, சிப்ஸ் செய்வதற்காக கேரளாவுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள், கேரளா மாநிலம் வயநாடு மார்க்கெட் விலை நிர்ணயபடி கூடலுாரில் நேந்திரன் வாழை கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பு ஆண்டு, துவக்கம் முதல் நேந்திரன் வாழைக்கு ஓரளவு விலை கிடைத்தது. கடந்த மாதம், கிலோவுக்கு, 60 ரூபாய் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இம்மாதம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ நேந்திரன், 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ, 20 ரூபாய் கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து விலை வீழ்ச்சியால், விவசாயிகள் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால், கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன் வாழை கிலோவுக்கு, 40 ரூபாய் குறையாமல் விலை கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும். தொடரும் விலை வீழ்ச்சியால், நஷ்டம் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, நேந்திரன் வாழைக்கு அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதுடன் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்,' என்றனர்.