உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கொத்தலகுண்டு பகுதியில் இடியும் நிலையில் புதிய பாலம்

கொத்தலகுண்டு பகுதியில் இடியும் நிலையில் புதிய பாலம்

பந்தலுார், - பந்தலுார் அருகே கொத்தலகுண்டு பகுதியில், 2.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, புதிய பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எருமாடு பகுதியில் இருந்து வெட்டுவாடி, மாங்கோடு வழியாக அய்யன்கொல்லி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கொத்தலகுண்டு என்ற இடத்தில் ஆற்றை கடப்பதற்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த, பாலம் சேதமானதால், மழை காலங்களில் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.மேலும், இந்த வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில், பாலம் பாதிக்கப்பட்டு, பஸ் இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இங்கு பழைய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நபார்டு நிதியின் மூலம், 2.48 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் ஒரு பகுதியில், மேட்டுப்பாங்கான பகுதியில் இருந்து, தாழ்வான பகுதிக்கு வரும் சாலை ஓரத்தில், 10 அடி துாரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்காமல், வெறும் மண் மூட்டைகளை மட்டுமே அடுக்கி பணி நிறைவு செய்யப்பட்டு உள்ளது.பாலம் பணி நிறைவு பெற்று வாகனங்கள் செல்ல துவங்கி உள்ள நிலையில், தொடர் மழை பெய்தால், இப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு பாலத்தை ஒட்டிய தடுப்பு சுவர் இடிந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுத்தால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது.எனவே, பாலம் கட்டுமான பணியை முறையாக மேற்கொள்ளாமல் காட்டிய ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி, பணியை முழுமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை