மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கோத்தகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலநடுக்க பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில், விதிமுறைக்கு புறம்பாக பாறைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில், பாறைகள் மற்றும் வெடி வைத்து கல் உடைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேயிலை தோட்டங்களை அழித்து குடியிருப்புகள் கட்டவும், சுற்றுலா விடுதிகளை கட்டவும் மாநில அரசு சமீபத்தில் தடை விதித்ததுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சென்றுள்ளது. அதில், 'தேயிலை தோட்டங்களில் கட்டுமான பணிகள் நடப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும்; மீறி கட்டடங்கள் கட்டப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தகவல் தெரிவிக்கவேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கோத்தகிரி அரவேனு அருகில் நிலநடுக்க பகுதியாக, புவியியல் துறையினரால் அறிவிக்கப்பட்ட கேத்ரீன் நீர் வீழ்ச்சி பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன், பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டுள்ளன. பிரதான சாலை ஓரத்தில் 'ஜேசிபி' உதவியுடன் மலையை கரைத்து, சாலை அமைத்து கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதே பகுதியில், ஒரு கிராமம் போல அருகருகில் விதிமுறைகளை மீறி பல விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்த புகாரின் பேரில், குன்னூர் ஆர்.டி.ஓ., காந்திமதி, வருவாய்த்துறை அலுவலர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோத்தகிரி பேரூராட்சி உட்பட கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றின் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என, விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
03-Oct-2025