| ADDED : செப் 02, 2011 11:23 PM
பந்தலூர் : தமிழக-கேரளா எல்லை பகுதியில் கடத்தல் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் இருமாநில போலீசாரின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கேரளா மாநிலம் நிலம்பூர் பகுதியில், கேரளா மற்றும் தமிழகத்தின் போலீசார் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நீலகிரி தேவாலா டி.எஸ்.பி., சுரேஷ்குமார், மலப்புரம் டி.எஸ்.பி., விஜயகுமார் முன்னிலையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் மணல், ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்துவது;கடத்தல் குறித்து இருமாநில போலீசாரும் தகவல்களை பகிர்ந்து கொள்வது; மாநில எல்லை பகுதியில் உள்ள வனம் மற்றும் கிராம புறங்களிலும், நகரங்களிலும் தீவிரவாதிகள், வெளியூர் நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்தல், சந்தேகப்படும் நபர்கள் தென்பட்டால் உரிய விசாரணை மேற்கொள்வது போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் தேவாலா இன்ஸ்பெக்டர் துரைசாமி, நிலம்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் இருமாநில போலீசார் பங்கேற்றனர்.