ஊட்டி : ஊட்டியில் ஏ.டி.சி., பகுதியில், 'சிறு தேயிலை விவசாயிகளை காப்பாற்றுங்கள்' அமைப்பின் சார்பில், பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை வழங்க வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். படுகதேச பார்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன், மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், 'பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்வதுடன் அதுவரை, கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்; கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றாத நிலையில், வரும் தேர்தலுக்கு முன்பு, இறுதி முயற்சியாக அரசுகளை வலியுறுத்துவது; சமீபகாலமாக, கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட, வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதால், உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை முழுமையாக தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பப்பட்டது.அதில், காங்., நிர்வாகிகள் விவேக் லஜபதி, வக்கீல் ரவிக்குமார் மற்றும் பில்லன் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாய சங்க பிரநிதிநிதிகள், பெண்கள் உட்பட, விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.