| ADDED : ஜன 20, 2024 02:08 AM
ஊட்டி:குன்னுாரில் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.குன்னுார் அருகே, பில்லிகொம்பை பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அங்குள்ள எஸ்டேட்டில் வேலை செய்து வருகின்றனர். அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்---1, படித்து வரும் அந்த மாணவி, அதே பகுதியை சேர்ந்த மதன்குமார், 21, என்பவரை காதலித்துள்ளார்.தொடர்ந்து, இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து, 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதே பகுதியில் திருமண மண்டபம் ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக, ஊட்டி சமூக நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சமூக நல அலுவலர் பிரவீணா தேவி மற்றும் அலுவலர்கள் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவத்தை உறுதிப்படுத்திய அதிகாரிகள் இரு வீட்டாரை அழைத்து பேசி ஆலோசனைகள் வழங்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.