உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒருப்புறம் வரத்து ; மறுபுறம் மைட்ஸ் நோய் பாதிப்பு; விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மிச்சம்

ஒருப்புறம் வரத்து ; மறுபுறம் மைட்ஸ் நோய் பாதிப்பு; விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மிச்சம்

ஊட்டி; நீலகிரி தேயிலை தோட்டங்களில் மகசூல் ஒருபுறமும், மைட்ஸ் நோய் தாக்குதல் மறுபுறமும் ஏற்பட்டிருப்பதால் சிறு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரியில், மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, கைகாட்டி, இத்தலார் உள்ளிட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும், 50க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டு டிச., மாதத்திலிருந்து ஏற்பட்ட பனி பொழிவால் தேயிலை வரத்து படிப்படியாக குறைந்தது.

மழையால் மகசூல் அதிகரிப்பு

தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியும் படிப்படியாக குறைந்தது. கூட்டுறவு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் துவக்கத்தில் அவ்வப்போது கோடை மழை பரவலாக பெய்தது. தேயிலை தோட்டங்களை உரமிட்டு பராமரிக்க ஏற்ற ஈரப்பதம் கிடைத்தது. இலைகள் துளிர் விட ஆரம்பித்தது. பகல் நேரங்களில் வெயில் தென்பட்டதால் சில பகுதிகளில் பசுந்தேயிலை அறுவடைக்கு தயாரானது.

'மைட்ஸ்' நோய் தாக்குதல்

அதே சமயத்தில் தேயிலை செடிகள் துளிர் விட்டு அறுவடைக்கு தயாராகும் நிலை ஒரு புறம் இருந்தாலும், மறுப்புறம் 'மைட்ஸ்' என்னும் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் தேயிலை இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தி நிறம் மாறி வருவதுடன், இலைகள் உதிர்ந்து செடிகள் பலவீனம் அடைந்து வருகிறது. தேயிலை மகசூல் குறையும் அபாயத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயி ராமன் கூறுகையில், ''தேயிலை தோட்டங்களுக்கு ஏற்றவாறு நல்ல மழை பெய்துள்ளது. செடிகள் துளிர் விட்டு மகசூலும் அதிகரித்துள்ளது. இதனை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்தால் நல்ல விலை கிடைக்க வாய்பபுள்ளது. இந்த சூழ்நிலையில், பல இடங்களில், 'மைட்ஸ்' என்னும் சிவப்பு சிலந்தி தாக்குதலால் நோய் பரவி வருகிறது. இதனால், தேயிலை செடிகள் நிறம் மாறி அறுவடை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இலைகளை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்ய முடியாது. தற்போது வரை, 700 ஏக்கர் வரை இந்த நோய் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிறு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை