உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு

ஊட்டியில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு

ஊட்டி: ஊட்டி நகராட்சி பகுதிகளில், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களில், விதிகளை மீறி, 'சீல்' உடைக்கப்பட்டு, சுற்றுலா விடுதிகள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பாதுகாக்கவும், பேரிடரை தவிர்க்கவும், கட்டடங்களை கட்ட, 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, ஊட்டியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிகரிக்கும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

விதிகளை மீறி கட்டுமானம்

இந்நிலையில், இங்கு மாஸ்டர் பிளான் சட்டத்தை மீறி கட்டப்படும் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், அனுமதி பெற்ற பின், விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் உள்ளன. இத்தகைய கட்டடங்களை கோர்ட் உத்தரவின் கீழ், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில், குடியிருப்புக்கான 'அப்ரூவல்' வங்கி கொண்டு வணிக நோக்கில் காட்டேஜ்களாக பயன்படுத்துவது போன்ற விதி மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டி நகராட்சி பகுதிகளில் விதி மீறி கட்டப்பட்டு வந்த கட்டடங்களை நகராட்சி நிர்வாகம் அடையாளம் கண்டு கடந்த மூன்று ஆண்டுகளில், 150க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ' சீல் ' வைத்தனர். அதில், அரசியல் தலையீடு காரணமாக ' சீல் ' வைக்கப்பட்ட சில கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.

சென்னை ஐகோர்ட் உத்தரவு

இந்நிலையில், சமீபத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவில், ' மலை பகுதியில் அனுமதி இல்லாமல் நடக்கும் காட்டேஜ்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில்,வருவாய் அலுவலர், நகராட்சி, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் உள்ளிட்ட துறைகளை இணைத்து குழு அமைத்து, உரிய ஆய்வு செய்து 'சீல்' வைக்க வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து நடந்த ஆய்வுகளில், ஊட்டி நகரின் பல பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டும் கட்டடங்களில் 'சீல்' வைக்கப்பட்டவைகள் கோடை சீசனில் விதிகளை மீறி செயல்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்துள்ளது. இதை தொடர்ந்து நடந்த ஆய்வில், இரு நாட்களுக்கு முன்பு தேனிலவு படகு இல்லம் பகுதியில் ஒரு கட்டடம் பின் பக்கமாக திறக்கப்பட்டு செயல்பட்டது கண்டறியப்பட்டு போலீஸ் உதவியுடன் நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தனர். இதை தொடர்ந்து, 'கடந்த காலங்களில், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.

புகார் அளிக்க முடிவு

நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில், சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு விதிமீறல்களின் கீழ், 150க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. சீல் வைத்த பல கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்படுவதாக புகார் வந்துள்ளது. நகராட்சி சார்பில் குழு அமைத்து அந்தந்த இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். சீல் உடைக்கப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை