ஊட்டியில் காவலர் குழந்தைகளுக்கான காப்பகம் திறப்பு
ஊட்டி: ஊட்டியில் காவலர் குழந்தைகளுக்கான புதிய காப்பகம் திறக்கப்பட்டது. ஊட்டி நகர மத்திய காவல் நிலையம், கடந்த, 1860ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், மாவட்டத்தின் முதல் காவல் நிலையமாக துவக்கப்பட்டது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், 55 காவலர்கள் பணியில் இருந்தனர். பின்பு, 1906 முதல் கோவை காவல் மாவட்டத்தில் இருந்து, நீலகிரி காவல் மாவட்டமாக பிரிக்கப்பட்டு புதிதாக, இரு காவல் நிலையங்கள் துவக்கப்பட்டன. 2016ம் ஆண்டு வரை மத்திய காவல் நிலையம் பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. அதன் பின் புதிய காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பழைய காவல்நிலையம், நீலகிரி எஸ்.பி., நிஷா உத்தரவுப்படி, காவலர் குழந்தைகளை பராமரிக்கும், 'ஹில் காப் சிரிச்' என்ற பெயரில் காப்பகமாக மாற்றம் செய்யப்பட்டு, காவலர் கேண்டீன் நிதியில் இருந்து பழமை மாறாமல் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மண்டல ஐ.ஜி., செந்தில் குமார் காப்பகத்தை திறந்து வைத்தார். நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில், ''திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை, 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை காப்பகம் செயல்படும். குழந்தைகளை பராமரிக்க, இரண்டு பெண் காவலர்கள், இரண்டு பெண் ஊர் காவல் படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரண்டு வயதிற்கு மேல் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுவர். இங்குள்ள விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாட, மாலை, 7:00 மணி வரை திறந்திருக்கும். காவலர் குடும்பத்தினர் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, 6 சி.சி.டி.வி., கேமரா பொருத்துப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த காப்பகம் வாயிலாக பெண் காவலர்கள் குழந்தைகளை தனியே விட்டு சென்றாலும் பாதுகாப்பு உள்ளதால், கவனம் சிதறல் இல்லாமல் நிம்மதியாக பணி புரியலாம்,''என்றார். இதில், ஏ.டி.எஸ்.பி., க்கள் சவுந்திரராஜன், மணிகண்டன் உட்பட, போலீசார் பங்கேற்றனர்.