பஸ் இருந்தும் மக்களுக்கு பயன் இல்லை: பயணிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
பந்தலுார்: பந்தலுாரிலிருந்து சேலத்திற்கு பஸ் இயக்கப்பட்டபோதும், மக்களுக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பந்தலுாரில் இருந்து, காலையில் சேலம், மாலையில் ஈரோடுக்கும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கோவைக்கு இயக்கப்படும் பஸ்கள், சேரம்பாடி மற்றும் தாளூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் நிலையில், பந்தலுாரில் காத்திருக்கும் பயணிகள் சீட் இல்லாமல் நின்றபடி பயணிக்கும் நிலை தொடர்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், பந்தலுாரில் இருந்து, சேலம், ஈரோடு பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களில், முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால், கூடலுாரில் இருந்து மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள், இந்த பஸ்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகள் நலச்சங்க தலைவர் பேபி கூறுகையில், ''தாலுகா தலைநகரான பந்தலுார் பகுதியிலிருந்து, பெயரளவிற்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவில் கோவை, திருப்பூருக்கு தாளூரிலிருந்து இயக்கப்படும் பஸ்களால், பந்தலுாரில் காத்திருக்கும் பயணிகள், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி, மன உளைச்சலுடன் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, பந்தலுாரில் இருந்து முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தவும், இரவில் பந்தலுாரில் புறப்பட்டு கோவைக்கு செல்லும் வகையில், அரசு பஸ் வசதி ஏற்படுத்தவும் வேண்டும்,'' என்றார்.