குறித்த நேரத்தில் பஸ் தேவை: பயணியர் வலியுறுத்தல்
கோத்தகிரி: கோத்தகிரி-ஊட்டி இடையே, குறித்த நேரத்தில் பஸ் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர். கோத்தகிரி-ஊட்டி வழித்தடத்தில், 20க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர, அரசு பஸ்சை நம்பி, காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கோத்தகிரியில் இருந்து, ஊட்டிக்கு, கடந்த காலங்களில், 30 நிமிடங்களுக்கு, ஒரு பஸ் என்ற அடிப்படையில், அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால், பயணிகள், நெரிசல் இல்லாமல், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வர முடிந்தது. தற்போது, இவ்வழித்தடத்தில், பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 45 அல்லது 50 நிமிடங்களுக்கு, ஒரு முறை மட்டுமே, பஸ் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் பஸ்சிற்காக, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வார விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில், இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும், அதிகமான பயணிகள், பஸ்சிற்காக, காத்துக் கிடப்பது வழக்கமாக உள்ளது. பஸ் பற்றாக்குறை காரணமாக, காலம் கடந்து வரும் பஸ்சில், இருக்கைகள் கிடைக்காமல், நின்று கொண்டு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைய வேண்டிய நிலை, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி, குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர ஏதுவாக, இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுப்பது அவசியம்.