ஊதிய நிலுவை தொகை தாமதமின்றி தாருங்கள்: ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
ஊட்டி: 'ஊதிய நிலுவை தொகையை கால தாமதமின்றி வழங்க வேண்டும்,' என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் இயக்குனர், உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி பணியாளர் சம்மேளனம் மாவட்ட செயலாளர் தொரை தலைமை வகித்தார். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் போஜராஜ், மூர்த்தி, ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 'தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, குடிநீர் பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், பைப் பிட்டர்,வரி வசூலிப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, 15,500 ரூபாய் வழங்க வேண்டும்; கொரோனா கால ஊக்கத்தொகை, 15 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்; தற்காலிக குடிநீர் பணியாளர்களை குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்; காலி பணியிடங்கள் நிரப்பும் போது, தற்காலிக குடிநீர் பம்ப் ஆபரேட்டர்களை அப்பணியிடங்களில் நிரப்ப வேண்டும்; 7 வது ஊதிய குழு ஊதிய நிலுவை தொகையை கால தாமதமின்றி வழங்க வேண்டும்,' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.