கண்களை கவரும் முண்டக்கை வனம் அருகே செல்ல மக்களுக்கு பயம்
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை வனப்பகுதி, சுற்றுலா பயணிகளின் கண்களை கவர்ந்து வந்தபோதும், அருகில் செல்ல பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சுற்றுலா பயணிகளை, சுண்டியிழுக்கும் இடமாக மேப்பாடி மற்றும் வைத்திரி பகுதிகள் அமைந்துள்ளன. அதில், மேப்பாடி பகுதி தேயிலை தோட்டம் அதனை ஒட்டிய வனம், மலைக்குன்றுகள் என காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாக உள்ளது. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் நாடி செல்லும் இடமான முண்டக்கை, சூரல்மலை மற்றும் புஞ்சிரி மட்டம் ஆகிய இடங்கள், கடந்த ஜூலை, 30-ல் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டன.அதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்ட உடல்கள் மண்ணில் புதைந்து காணாமல் போனது. முண்டக்கை வனம் பசுமையாக காட்சி தருவதுடன், மலைகளுக்கு இடையே காணப்படும் அருவிகள் காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கிறது. இந்த வனப்பகுதிக்கு சென்று அருவிகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால், இந்த பகுதியில் மேலும் பேரிடர் ஏற்படலாம் என்பதால், சுற்றுலா பயணிகள் முண்டக்கை பகுதிக்கு செல்ல அனுமதியில்லை. அதன் அருகே உள்ள, தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்வோர், உள்ளூர் மக்களை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில்,' கடந்த காலங்களில் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்து, அவர்கள் பார்வையிட்ட பகுதிகள் தற்போது அனைவரையும் அச்சப்பட வைக்கும் இடமாக மாறிப்போனது. இதனால், இங்குள்ள பசுமை காட்சிகள் தற்போது இயற்கைக்கு மட்டுமே சொந்தமானதாக மாறியுள்ளது,' என்றனர்.