பராமரிப்பு இல்லாத தனியார் எஸ்டேட் பகுதி வனவிலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
கூடலுார்: -கூடலுார் தேவர்சோலை பகுதிகளில், பராமரிப்பு இல்லாத தனியார் எஸ்டேட் பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களால் வனவிலங்கு நடமாட்டம், அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கூடலுார் தேவர்சோலை பகுதியில், 30-க்கும் மேற்பட்ட மாடுகளை தாக்கி கொன்ற புலி, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதனால், பொதுமக்களும் வனத்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.ஆனால், பராமரிப்பு இல்லாத தனியார் தேயிலை தோட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி போன்ற ஆபத்தான விலங்குகள் நடமாட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேவர்சோலை பகுதியில் உள்ள, சில தனியார் எஸ்டேட்களில் தொடரும் நிர்வாக பிரச்னை, ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், பல ஏக்கர் பரப்பிலான தேயிலை தோட்டங்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. அவ்வாறு விடப்பட்ட தேயிலை செடிகள், தாவரங்கள் வளர்ந்து முட்புதர்களாக மாறியுள்ளன. அப்பகுதியில் உணவு தேடி வேட்டைக்கு வரும் புலி, சிறுத்தை போன்ற ஆபத்தான விலங்குகள், கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கும் ஆபத்தும் உள்ளது. இதனை தடுக்க பராமரிப்பு இல்லாத தேயிலை தோட்டங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'தனியார் எஸ்டேட் பகுதியில் பராமரிப்பின்றி விடப்பட்ட, பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவைகள், மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால்நடைகளை மீண்டும் தாக்கி கொல்லும் ஆபத்து உள்ளது. எனவே, அப்பகுதிகளில் வளர்ந்துள்ள தேயிலை செடிகள் மற்றும் முட்புதர்களை முழுமையாக அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.