எரியாத தெருவிளக்குகள் கரடிகளால் மக்கள் அச்சம்
குன்னுார்; குன்னுார் மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட தைமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தெருவிளக்குகள் எதுவும் எரியாத நிலையில்,வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பின்காரணமாக, இரவில் வெளியே செல்லமுடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.குன்னுார் அருகே மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தைமலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமம் உட்பட சுற்றுப்புறகிராமங்களிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை.கரடி, காட்டெருமை உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, மக்கள் இரவில் நடந்து செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, பணிகள் முடித்து இரவில் தனியாக நடந்து வரும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.இது குறித்து மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வனவிலங்குகளால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.