மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு; குன்னுாரில் நடந்த முகாமில் தகவல்
குன்னுார்; குன்னுார் ஜெயின் மண்டபத்தில் அரசு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், பேசியதாவது:மக்களின் குறைகளை, நேரடியாக கேட்டறிய, இந்த ஆண்டு, சட்டசபையில் அறிவித்ததன்படி நகர், ஊரக பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் கடலுார் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.முகாமில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை அழைத்து செல்ல சக்கர நாற்காலி, காவல்துறையின் உதவி மையம், பதிவு செய்ய இடம் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நீலகிரியில், 'நகர் பகுதிகளில், 65; ஊரக பகுதியில் 81,' என, மொத்தம் 146 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக, 67 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.முகாமில், 13 அரசு துறைகளால் பல்வேறு வகையான, 45 சேவைகள் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் அளித்த நாளில் இருந்து, 45 நாட்களுக்குள் மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார். முகாமில் சுகாதார நலத் துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.