ஊட்டி பூங்காவில் பொங்கல் விழா; சுற்றுலா பயணிகளுக்கு போட்டிகள்
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை, 10:00 மணிக்கு மாவட்ட நிர்வாகம்; தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து, சமத்துவ பொங்கல் விழாவை நடத்தின. கலெக்டர் லட்சுமி பவ்யா விழாவை துவக்கி வைத்தார்.பூங்கா மைதானத்தில், செங்கரும்பை வைத்து, மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, முதலாவதாக தோட்டக்கலை துறை ஊழியர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு 'மியூசிக் சேர்' போட்டி, குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன் ஓட்டம் நடந்தது. அதன்பின், நீலகிரி வாழ் தோடர், படுகர் மக்களின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில், சுற்றுலா பயணிகளும் நடனமாடினர். பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு மலர் செடிகள் பரிசாக வழங்கப்பட்டது.