நெடுஞ்சாலையோரம் பள்ளம்: வாகன விபத்து அபாயம்
கூடலூர்; முதுமலை, அபயாரண்யம் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. இங்கு சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். அதில், முதுமலை புலிகள் காப்பகம் அபயாரண்யம் அருகே, கடந்த வாரம் கர்நாடகா அரசு பஸ், தனியார் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில், அங்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது. அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர். வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'அப்பகுதியில், கடந்த வாரம் நடந்த வாகன விபத்து காரணமாக, பாலத்தை ஒட்டிய பள்ளத்தில், வாகன விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்ட, இரும்பு தடுப்புகள், மணல் முட்டைகள் பாதிக்கப்பட்டன. அதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், வாகன விபத்துக்கள் அபாயம் உள்ளது. அப்பகுதியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.