உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிவன் கோவிலை காப்பாற்ற கோரி ஆர்ப்பாட்டம்; எருமாடு பகுதியில் திரளான மக்கள் பங்கேற்பு

சிவன் கோவிலை காப்பாற்ற கோரி ஆர்ப்பாட்டம்; எருமாடு பகுதியில் திரளான மக்கள் பங்கேற்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. பந்தலுார் எருமாடு பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிவன் கோவில் மீட்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். கோவில் தர்மகர்த்தா சுந்தரம் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:இப்பகுதியில், 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருமாடு சிவன் கோவில், திப்பு சுல்தான் படை எடுப்பின் போது சிதிலம் அடைந்தது. தொடர்ந்து, இப்பகுதி விவசாயிகள் இணைந்து கோவிலை புனரமைத்தனர். கோவிலுக்கு, 48 சென்ட் நிலம் மட்டுமே உள்ள நிலையில், இதனை ஒட்டி அமைந்துள்ள கிராம சாவடி நிலத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 1982ம் ஆண்டு கோவிலை ஒட்டி வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதால், பதட்டமான சூழல் உருவாகியது. தொடர்ந்து, பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்த நிலையில், 2,000ம் ஆண்டில், மாவட்ட கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூ நில பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தினார். அதன்பின், ஆண்டுதோறும் சிவராத்திரி விழா மற்றும் வருவாய்த்துறை அனுமதியுடன் இப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலை அரசு கைவிட வேண்டும். மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பகுதியில் ஜாதி, மதங்கள் பெயரால் பிரிவினை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர், படுகர் சமுதாய நிர்வாகி சபிதா போஜன், காட்டுநாயக்கர் சமுதாய தலைவர் சந்திரன், குரும்பர் முன்னேற்ற சங்க தலைவர் அச்சுதன் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்றனர். மீட்பு குழு பந்தலுார் தாலுகா நிர்வாகி பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை