கூடலுார்:மசினகுடி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தொட்லிங்கி முதல், கோவில் வளாகம் சுற்றி உள்ள சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.நீலகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற, முதுமலை, மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் பிப்., மாதம் நடைபெற்று வருகிறது. விழாவுக்கு, நீலகிரி மட்டுமின்றி கர்நாடகா, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர வசதியாக, திருவிழாவின் போது கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம், 16ம் தேதி துவங்கி, 5 நாட்கள் நடக்கிறது. திருவிழாவுக்கான, முன் ஏற்பாடுகளை, இந்து அறநிலை துறை மற்றும் சோலுார் பேரூராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் நிதியில், சோலுார் பேரூராட்சி மூலம், தொட்லிங்கி முதல், கோவில் வளாகத்தை சுற்றி ஒரு கி.மீ., துாரம் சாலை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.இதனை வரவேற்றுள்ள பக்தர்கள் கூறுகையில், 'கோவில் திருவிழாவின் போது பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, வழக்கத்தைவிட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.மேலும், பக்தர்கள் சிரமத்தை தவிர்க்க, இரவு நேரத்தில், பக்தர்களின் வாகனங்கள் கோவிலுக்கு சென்று வர முதுமலை வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்,' என்றனர்.