வயல்வெளி போல மாறிய சாலை; வாகனங்களை இயக்குவதில் சிரமம்
ஊட்டி; ஊட்டி தலையாட்டுமந்து, அங்கன்வாடி மைய சாலை வயல்வெளி போல மாறி உள்ளதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது.ஊட்டி- குன்னுார் சாலையில் உள்ள, தலையாட்டுமந்து பகுதியில் உள்ள சாலையை உள்ளூர் மக்கள், கோரிசோலா உட்பட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா வாகனங்களும், கோத்தகிரி சாலைக்கு செல்ல இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.இப்பகுதியில் ஒரு மாதமாக மழைநீருடன் கழிவுநீரும் ஓடுவதால், அங்குள்ள அங்கன்வாடி மையப்பகுதி சாலையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகளுடன் பெற்றோர் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு சாலையோரம் நாள்தோறும் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களாலும், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. போலீசாரும் இதனை கண்டு கொள்வதில்லை. மக்கள் கூறுகையில், 'இப்பகுதியை நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.