கோத்தகிரி;கோத்தகிரி பகுதியில், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பேரூராட்சி துறை சார்பில், 44.13 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட, கெராடாமட்டம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம்;நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட, காகாசோலை இடுக்காடு இடையே, அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை; 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் காகாசோலை சமுதாய கூடத்தில் ஆய்வு செய்தார். மேலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் அங்கன்வாடி மையம், நடுஹட்டி ஊராட்சி, பாண்டியன் நகர் பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பல்நோக்கு மைய கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பேரூராட்சி துறை சார்பில், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, கார்சலி - குண்டாடா சந்திப்பு வரை நபார்டு திட்டத்தின் கீழ், 96.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை பணி உட்பட, மொத்தம், 44.13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், பணியை தரமாக விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கூடுதல் ஆட்சியர் கவுசிக், தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை மற்றும் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.