உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீபாவளி பண்டிகையால் குவிந்த 46 டன் கழிவுகள் :களமிறங்கி அகற்றிய துாய்மை பணியாளர்கள்

தீபாவளி பண்டிகையால் குவிந்த 46 டன் கழிவுகள் :களமிறங்கி அகற்றிய துாய்மை பணியாளர்கள்

ஊட்டி: தீபாவளி பண்டிகையால் ஊட்டி நகரில் கூடுதலாக குவிந்த 46 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. வழக்கமாக ஊட்டியில் தினமும், 36 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில், 8 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து அகற்றப்படும். வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு, தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. 46 டன் கழிவுகள் அகற்றம் தீபாவளி பண்டிகை காரணமாக நகரில், பட்டாசு கழிவு உள்ளிட்ட பல்வேறு குப்பை கழிவுகள் காணப்பட்டன. நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் சிபி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் வைரம் தலைமையிலான குழுவினர் நகராட்சி முழுவதும் வார்டு வாரியாக நேற்று அதிகாலை முதல், தூய்மை பணியில் ஈடுபட்டனர். பட்டாசு கழிவுகள் உட்பட ஊட்டி நகராட்சி முழுவதும் மொத்தம், 46 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தீட்டுக்கல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சுகாதாரத் துறையினர் கூறுகையில், மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் கழிவுகள் தீட்டுக்கல் கொண்டு செல்லப்பட்டு உரமாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மற்ற கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு மொத்தமாக அனுப்பப்படுகின்றன. ஊட்டி நகரில் கடந்த 3 நாட்களாக தேங்கி கிடந்த குப்பை கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !