சாலையில் முகாமிடும் யானை; பள்ளி மாணவர்கள் அச்சம்
பந்தலுார்,; பந்தலுார் அருகே பென்னை பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில், யானை முகாமிடுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள்; மக்கள் அச்சமடைந்து உள்ளனர். பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் இருந்து பென்னை, அரசு துவக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதியில் உள்ள இந்த சாலையில், கடந்த சில நாட்களாக கொம்பன் யானை ஒன்று பகல் நேரங்களில் சாலை ஓரங்கள் மற்றும் சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த பகுதிக்கு செல்ல அரசு பஸ் வசதி ஏதும் இல்லாத நிலையில், அவசர தேவைகளுக்கு ஆட்டோ போன்ற வாகனங்களை மக்கள் வாடகைக்கு எடுத்து செல்வது வழக்கம். மேலும், பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலையில், சாலையில் உலா வரும் யானையால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் புகாரையடுத்து, பிதர்காடு வனத்துறையினர், வனச்சரகர் ரவி மற்றும் வனவர் சுதீர்குமார் ஆகியோர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.