உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு

ஊட்டி; ஊட்டி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் சார்பில், 'நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியன் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பது இல்லை. ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால், மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை, கூர்மையான ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. இந்த அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான கருவி தான் கணிதம். மாற்றுத்திறனாளி மாணவர்கள், இயற்கை வழங்கியள்ள கொடை எது என்பதை புரிந்து, வாழ்க்கையை மேற்படுத்திக் கொள்ளலாம். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவரை போல, பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதை காண முடிகிறது. பார்வையை முற்றிலும் இழந்த ஒருவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய தேவையில்லை. நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக நிற்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது. ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தாலும், செயற்கை அங்கங்கள் வேலை செய்யும். எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை வரமாக நினைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமாருக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்கை மொழியில் விளக்கினார். ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை