சுகாதார சீர்கேட்டில் சிலேட்டர் ஹவுஸ்; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
குன்னுார்; குன்னுார் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சிலேட்டர் ஹவுசில் பராமரிப்பு இல்லாமல், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் டி.டி.கே., சாலை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சியின் வதை கூடத்தில், (சிலேட்டர் ஹவுஸ்) ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி கடைகளுக்கு, வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த இந்த வதை கூடம், கடந்த 2008ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.அதன் பின் முறையாக பராமரிக்கப்படாமல், இப்பகுதியில் உள்ள நடைபாதை கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால்,துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் கூறுகையில்,''கடந்த மாத இறுதியில் நடந்த நகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக புகார் தெரிவித்த போது, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.