சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மூவர் மீது வழக்கு பதிவு: ஒருவர் கைது
பந்தலுார்; கூடலுார் அருகே பழங்குடி கிராமத்தில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியர் தொந்தரவு கொடுத்த மூன்று தாத்தாக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த, 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள், தாங்கள் படிக்கும் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்பு பங்கேற்றனர். அதில், பேசிய ஆசிரியர்கள், சிறுமியருக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மூன்று சிறுமிகள் எழுந்து, 'தங்கள் வீட்டின் அருகே உள்ள, மூன்று தாத்தாக்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்,' என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக, 'சைல்டு லைன்' நிர்வாகிகளுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள், சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை செய்து, தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில், மூன்று பேர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதில், வெள்ளன்,70, விஜயன்,65, செரு,47, ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, வெள்ளன் மற்றும் விஜயன் இருவரும், நடந்து செல்ல கூட முடியாத நிலையில் இருந்தனர். அதனால், 'இருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜர் படுத்த வேண்டும்; செரு என்பவரை மட்டும் 'போக்சோ' வழக்கில் கைது செய்ய வேண்டும்,' என, போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, செரு என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கூடலுார் சுற்றுப்புற பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.