உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் கடந்த ஆண்டில் 29 டிகிரி சி வெப்பநிலை; ஊட்டியில் நடந்த கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

நீலகிரியில் கடந்த ஆண்டில் 29 டிகிரி சி வெப்பநிலை; ஊட்டியில் நடந்த கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

ஊட்டி, ; ஊட்டி அருகே பர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. இதற்கு, நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில், 'காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில், முக்கியமாக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவது; காடுகளை பாதுகாப்பது; உணவு கழிவுகளை மறு சுழற்சி செய்வது; நிலையான விவசாய முறைகளை பின்பற்றுவது; போக்குவரத்து முறைகளை மாற்றி அமைப்பது மற்றும் காலநிலை மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது,' என, பல்வேறு விவாதங்கள் நடந்தன.தொடர்ந்து, 'பூவுலகின்' நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:பிற இடங்களை போல, நீலகிரியிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில், 29 டிகிரி 'சி' வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இதுதான் அதிக வெப்பநிலையாகும். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இயற்கை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். காடுகளில் தீ விபத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஓராண்டில், 200 ஏக்கர் பரப்பிலான காடுகள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டன. வெப்பம் இன்னும் அதிகரிக்குமானால் இயற்கையாக உள்ள காடுகள் வறட்சியாக மாற வாய்ப்புள்ளது. மாநில அரசு மாவட்ட நிர்வாகம் காலநிலை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'சில்ஹல்லா'மின் திட்டம் வேண்டாம்

மேலும், ஐ.பி.சி.சி., என்ற, 160 நாடுகளின் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான இரண்டு விஷயங்களை முன் வைக்கின்றனர். இங்குள்ள இருக்கக்கூடிய நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும். 2030 க்குள் இப்பணிகளை திறம்பட மேற்கொண்டால்தான், 2 டிகிரி வெப்ப உயர்வை தடுக்க முடியும். மின் திட்டத்தை பொறுத்தவரை, 20 அல்லது 30 மெகாவாட் திட்டத்தால் அந்தளவுக்கு பாதிப்பு இருக்காது. சில்ஹல்லா மின் திட்டம், 2000 மெகாவாட் திட்டம் என்பதால் சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை வேண்டாம் என்று தான் வலியுறுத்தி வருகிறோம். அரசு இதனை ஏற்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை