கூடலுார்;அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், அரசு சேவை சாரா டாக்டர்கள் ஒப்பந்த காலம் ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளதால், மலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை; கூடலுார் மாவட்ட தலைமை மருத்துவமனை; குன்னுார், கோத்தகிரி, பந்தலுார் அரசு மருத்துவமனைகளில், நிரந்தர டாக்டர்களுடன், முதுநிலை டாக்டர் படிப்பை நிறைவு செய்த, அரசு சேவை சாரா மருத்துவ மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றி செல்கின்றனர்.இந்நிலையில், மாநில அரசின், மக்கள் நல்வாழ்வுத்துறை பிறப்பித்த உத்தரவில்,'2022ல் இருந்து, முதுநிலை மருத்துவ படிப்பு நிறைவு செய்த அரசு சேவை சாரா மருத்துவ மாணவர்களின் ஒப்பந்த காலம் ஓராண்டாக குறைக்கப்படுகிறது. ஒப்பந்தத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, முதுநிலை படிப்புகளுக்கு, 40 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய்; முதுமலை டிப்ளமோ படிப்புகளுக்கு 20 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.இதனால், நிலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் முதுநிலை டாக்டர்கள் பணியை நிறைவு செய்து, செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பாதிக்கும் அபாயம் உருவாகி வருகிறது. நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் மைய செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில்,''கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஒப்பந்த டாக்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்து வருகிறது. இந்நிலையில், அரசு இவர்களின் ஒப்பந்த காலத்தை ஓராண்டாக்கி இருப்பது, மலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையை நம்பி உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு ஒப்பந்த காலத்தை இரண்டு ஆண்டுகளாக தொடரவும்; டாக்டர்களுக்கு தேவையான வசதிகளையும், மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரண வசதிகளை செய்து தர வேண்டும்,'' என்றார்.