உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆறு ஆண்டுகளாக நடக்கும் தொகுப்பு வீட்டு பணிகள்; கட்டடத்தை இடித்து குடிசையில் அவதிப்படும் பழங்குடிகள்.. எப்போது விடியல்?

ஆறு ஆண்டுகளாக நடக்கும் தொகுப்பு வீட்டு பணிகள்; கட்டடத்தை இடித்து குடிசையில் அவதிப்படும் பழங்குடிகள்.. எப்போது விடியல்?

கூடலுார்; கூடலுார் கோடமூலா பழங்குடி கிராமத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட அரசின் இலவச வீடு கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பழங்குடி மக்கள் குடிசையில் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பணியர், காட்டுநாயக்கர், குரும்பர் இன பழங்குடி மக்கள் வனத்தை ஒட்டிய குக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். பூர்வ குடிகளான, இவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில், கல்வி, உடல் ஆரோக்கியம், இலவச வீடுகள் கிடைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களால் சில கிராம பழங்குடி மக்களின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டாலும், பல பழங்குடி கிராமங்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை.

ஆறு ஆண்டுகளாக நடக்கும் பணி

அதில், தொரப்பள்ளி அருகே உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்தில், 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பலருக்கு, 6 ஆண்டுகளுக்கு முன் அரசின் இலவச வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது. சில வீடுகள் மட்டும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் அடித்தளம், சுற்றுச்சுவர் மட்டும் அமைத்ததுடன், பணிகளை முழுமையாக முடிக்காமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விட்டார். அரசின் இலவச வீடுகளை நம்பி ஏற்கனவே வசித்து வந்த பழைய வீட்டை இடித்துள்ள பழங்குடியினர், தற்போது வசிக்க வீடின்றி, குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மறுபுறம், வேறு கிராமங்களில், சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வந்த அதிகாரிகளிடம், கோடமூலா கிராம மக்கள், 'மழை காலத்தில் தாங்கள் குடிசையில் அவதிப்படுகிறோம். தங்களின் வீட்டு பணி முழுமைபடுத்தி தர வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தும் பயனில்லை. பழங்குடியினர் கூறுகையில், 'ஆறு ஆண்டுகளுக்கு முன் அரசு இலவச வீடு கட்டும் பணி துவக்கப்பட்டு, முழுமை பெறாமல் இருப்பது குறித்தும், வீடுகளை கட்டித் தர வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் பல முறை மனுக்களை அளித்தும் நடவடிக்கை இல்லை. கிராமத்தை பார்வையிட கூட யாரும் வருவதில்லை. மலையில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறோம்,' என்றனர்.

விரைவில் போராட்டம் நடத்தப்படும்...

கூடலுார் செம்பக்கொல்லி பழங்குடியின தலைவர் சுரேஷ் கூறுகையில், ''கூடலுாரில், சில பழங்குடி கிராமங்களில், வசிக்கும் மக்களுக்கு இலவச வீடு கட்டும் பணி துவங்கப்பட்டது. அதில், பல கிராமங்களில் வீடுகள் முழுமை பெறாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அரசின் இலவச வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீடுகளை பழங்குடியினர் இடித்து விட்டனர். தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை தீர்வு காணப்படவில்லை. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வீடுகளை ஆய்வு செய்து, பணிகளை முடித்து, பயனாளிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை