மேலும் செய்திகள்
பாலத்தை ஒட்டி நிரந்தர தடுப்பு அவசியம்
25-Oct-2025
கூடலூர்: கூடலூர், தேவாலா கைதகொல்லி அருகே, கடந்த ஆண்டு சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்காததால், மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூடலூர் தேவாலா பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் பெய்த பலத்த மழையின் போது, கைதக்கொல்லி வழியாக செல்லும் நீரோடையில், வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோழிக்கோடு சாலையில், பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் சேதமடைந்தது. சாலையோரம் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, நெடுஞ்சாலை துறையினர் மண் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக மண்ணரிப்பு ஏற்படுவதை தடுத்தனர். அப்பகுதியில், நிரந்தர தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் அடுக்கப்பட்டுள்ள மண் மூட்டைகள் சேதமடைந்து, சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை பலவீனமடையும் ஆபத்து உள்ளதால் ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழையின் போது, சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க இதுவரை நடவடிக்கை இல்லை. நடப்பு ஆண்டு ஜூன் துவங்கிய பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், பகுதியில் அடுக்கப்பட்ட மண் மூட்டைகளும் சேதமடைந்து, மீண்டும் மண்ணரிப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சாலையும் பலவீனமடைந்து, போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, அப்பகுதியில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறினர்.
25-Oct-2025