உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சோலார் மின்வேலியை சேதப்படுத்தியதால் சிக்கல்

 சோலார் மின்வேலியை சேதப்படுத்தியதால் சிக்கல்

கூடலுார்: 'கூடலுார், புத்துார்வயல் பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில், பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் புத்துார்வயல் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை கண்காணித்து தடுக்க, வனத்துறை சார்பில், தேவசம்வயல் பகுதியில், செயற்கை நுண்ணறிவு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. நாடுகாணியில் அமைக்கப்பட்டுள்ள, கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில், 24 மணி நேரம் கண்காணிப்பு நடக்கிறது. இந்நிலையில், 'செலுக்காடி மக்னா' உள்ளிட்ட சில காட்டு யானை இவ்வழியாக, புத்துார்வயல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது. தகவல் அறிந்து வரும் வனத்துறையினர் யானைகளை விரட்டினாலும், அவை ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து, பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சாலை ஓரத்தில் அங்குள்ள மக்கள், சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அடையாளம் தெரியாத சிலர், மின்வேலியை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதனால், காட்டு யானை இரவில் மீண்டும் ஊருக்குள் வந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனை தடுக்க முடியாமல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'மக்கள் இணைந்து, அப்பகுதியில் சோலுார் மின்வேலி அமைக்கப்பட்டபோது காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது. சிலர் அதனை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கி உள்ளன. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, சோலார் வேலியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதனை சீரமைத்து தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை