வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீலகிரி மாவட்ட மக்களின் மிகமுக்கியமான பிரச்சனை.கடந்த சில நாள்களுக்கு முன் ஆய்வுக்காக நீலகிரி வந்த முதலமைச்சருக்கு மனு அனுப்பி வைத்தோம் ஆனால் இது குறித்து எதுவும் பேசாமல் போனது மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
குன்னுார் : நீலகிரியில் வசிக்கும் பல்வேறு கிராம மக்களின் நிலபுலன்கள் கூட்டுபட்டாவில் உள்ளதால், வாரிசுதாரர்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் தொடர்கிறது.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் படுகரின மக்களின் நில புலன்கள், உரிமையாளர் பெயரில் இல்லாமல், மூதாததையரின் பெயரிலேயே கூட்டு பட்டாவில் உள்ளது. இவர்கள் பாரம்பரியமாக, விவசாயம் செய்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, கடன்கள், மானியம் மற்றும் இதர பயன்கள் எதுவும் கிடைப்பதில்லை.மேலும், கூட்டு பட்டாவில் உள்ள மூதாதையரின் நிலங்களை, அனுபவித்து வரும் வாரிசுகளுக்கு தனிபட்டாவாக மாற்ற முடியாத சூழல் உள்ளதால், இந்த மாவட்டத்தில் மட்டும், வருவாய் துறையிடமிருந்து அனுபோக (என்ஜாய்மென்ட்) சான்றிதழ் பெற்று அரசின் திட்டங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும், பல குளறுபடிகள் தொடர்கிறது.இந்த பிரச்னையால், பாரத பிரதமரின் 'கிசான் சம்மான் நிதி யோஜ்னா' திட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள், 6,000 ரூபாய் உதவி தொகை பெற முடியாமல் உள்ளனர். இங்கு உரிய சிட்டா இல்லாததால், மானிய விலையில் பெறும் விவசாய கருவிகளும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இது மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ளவர்கள் சிலர் மறைமுகமாக நிலங்களை விற்பனை செய்வதால், குழப்பம் ஏற்பட்டு உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் நிலவுடமைகளை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் அதனை செயல்படுத்துவதிலும் சிக்கல் தொடர்கிறது. முகாம் அவசியம்
லஞ்சம் இல்லாத, நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''நீலகிரியில் கூட்டு பட்டாவுக்கான அனுபோக சான்றிதழ் பெற்ற பிறகு, போலி ஆவணங்களை தயார் செய்து ரியல் எஸ்டேட்களுக்கு, நிலங்களை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதில், பெட்டட்டி, எடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலி ஆவணம் தயாரித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால், தங்களது நிலங்கள் பறிபோகும் அச்சத்தில் மாவட்ட மக்கள் உள்ளனர். எனவே, கிராமங்கள் தோறும் முகாம் நடத்தி, சிறப்பு நிலவுடமை மேம்பாட்டு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன,'' என்றார்.
விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், தேயிலை தோட்டம், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் என, 2 லட்சம் ஏக்கர் வரை உள்ளன. பாரம்பரியமாக வாழ்ந்து வரும் படுக மக்கள் வாய்மொழியாக பாக பிரிவினை நடத்தி வருகின்றனர். நிலவுடமை திட்டம் நிறைவேற்றாததால், பாதிப்பு நீடிக்கிறது. கிண்ணக்கொரையில் துவக்கப்பட்ட 'பைலட்' திட்டத்தில், டிரோன் கேமராவை பயன்படுத்தியும், லோக் அதாலத் சட்ட மைய நீதிபதியின் அறிவுரை படியும், குறிப்பிட்ட மக்களுக்கு 'சப்--டிவிஷன்' செய்தும், அப்பணி நிறுத்தப்பட்டது. லட்ச கணக்கான ஏக்கர் மறு அளவீடு செய்ய மீண்டும் 'டிரோன் சர்வே' செயல்படுத்தினால் தீர்வு கிடைக்கும்,'' என்றார்.
வருவாய் துறையினர் கூறுகையில்,'கடந்த, 1984ல் இருந்து 2000ம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் உள்ள நிலங்களை மறு அளவீடு செய்து, உரியவருக்கு பட்டா பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது. அப்போது. நீலகிரியில், 'சர்வே' நடத்திய போது, 70 சதவீத மக்கள், தங்கள் நிலங்களை தனி பட்டாவாக மாற்ற முன் வரவில்லை. இதனால், நில உடமை திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது எடப்பள்ளியில் 'டிஜிட்டல் சர்வே' பணி துவக்கப்பட்டு நடந்து வருகின்றன,' என்றனர்.
நீலகிரி மாவட்ட மக்களின் மிகமுக்கியமான பிரச்சனை.கடந்த சில நாள்களுக்கு முன் ஆய்வுக்காக நீலகிரி வந்த முதலமைச்சருக்கு மனு அனுப்பி வைத்தோம் ஆனால் இது குறித்து எதுவும் பேசாமல் போனது மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.