| ADDED : ஜன 29, 2024 11:53 PM
கோத்தகிரி;கோத்தகிரியில், 2.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை உட்பட, குட்கா பொருட்கள் சில கடைகளில் விற்பனை செய்வதாக, தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் தகவலை உறுதி செய்தனர்.குன்னுார் குற்றப்பிரிவு போலீசார் உடன் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தபோது, என்.எஸ்.ஜே., என்ற மளிகை கடையில், 153 கிலோ போதை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.இதன் மதிப்பு, 2.37 லட்சம் ரூபாய். பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோத்தகிரி ராம்சந்த் ரைபிள்ரேஞ்ச் பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ஜெயசிம்மன், 55, என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.