உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் ஆய்வு; கடந்த 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் ஆய்வு; கடந்த 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

கூடலுார்; கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, செக் ஷன்-17 நிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதி களில், மாநில நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் ஆய்வு செய்துள்ளதால், 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் நிலம்பூர் கோவிலகம் வசம், 80.88 ஆயிரம் ஏக்கர் ஜென்ம நிலம் இருந்தது. தமிழக அரசு, 1969ல் கூடலூர் ஜென்மம் ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து, 1974ல் ஜென்மம் நிலங்களை கையகப்படுத்தியது.அதில், அரசால் தீர்வு காணப்பட்ட நிலங்களை தவிர்த்து, பிற குத்தகை நிலம், 52 ஆயிரம் ஏக்கரை செக் ஷன்-17 பிரிவு நிலமாக வகைப்படுத்தியது. அதில், 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வன நிலமாக மாற்றப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் தனியார் எஸ்டேட்களை தவிர, கைவசம் உள்ள நிலங்களில், மக்கள் வீடுகள் கட்டி வசிப்பதுடன் விவசாயம் செய்து வருகின்றனர். கோர்ட் உத்தரவுபடி, 'இங்கு எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யக் கூடாது,' என்ற உத்தரவுஅமலில் உள்ளது. இந்நிலையில், 'மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,' என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. தேர்தலின் போது, அரசியல் கட்சியினர், 'இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கூறினாலும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில், தற்போது, மாவட்டத்தில், செக்ஷன்-17 பிரிவு நிலப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான செயல் திட்டம் குறித்து, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், நிலப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக, அரசு சட்ட அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது.சமீபத்தில், இங்குள்ள குடியிருப்புகள் குறித்து வருவாய் துறையினர், நில அளவை செய்து, ஆவணங்களையும் பெற்று சென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் மதுசூதனன் ரெட்டி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள், மரப்பாலம், பால்மேடு, ஒவேலி பகுதிகளில் நேரடி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, செக் ஷன்-17 நிலம், தொடர்பான அனைத்து விபரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், 50 ஆண்டுகளாக தொடரும், செக் ஷன்-17 நில பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்திருப்பதால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவு படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !