டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்; மார்க்கெட் வியாபாரிகள் மறியல்
ஊட்டி: ஊட்டியில், லாரி டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், மார்க்கெட் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் காய்கறி ஏற்றி வந்த லாரியை, டிரைவர் பிரபா,35, என்பவர் லோயர் பஜார் பகுதியில் ஓட்டி வந்த போது, முன்புறம் சுற்றுலா கார் நின்றுள்ளது. அதனை எடுக்க 'ஹாரன்' அடித்துள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டார்.லாரியை எடுத்து மார்க்கெட்டுக்கு வந்த பிரபாவை பின் தொடர்ந்து வந்த சில டாக்சி டிரைவர்கள் மீண்டும் அவரை தாக்க முயற்சித்துள்ளனர். பயந்து போன அவர், காய்கறி லாரி உரிமையாளரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று திரண்டு பி-1 போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். உடனடி நடவடிக்கை இல்லாததால், மாலையில் திடீரென மார்க்கெட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன.சம்பவ பகுதிக்கு வந்த டவுன் டி.எஸ்.பி., யசோதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.