அச்சுறுத்தும் புல்லட், கட்டை கொம்பன் யானைகள்; அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினால் நிம்மதி
பந்தலுார்; 'பந்தலுார் அருகே அய்யன்கொல்லி சுற்றுப்பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தும் கட்டை கொம்பன் மற்றும் புல்லட் ஆகிய யானைகளை அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக புல்லட் மற்றும் கட்டை கொம்பன் ஆகிய இரண்டு யானைகளும், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. தற்போது, இந்த இரண்டு யானைகளும் சேரம்பாடி மற்றும் பிதர்காடு ஆகிய வனச்சரகங்கள் சந்திக்கும், அய்யன்கொல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.அடிக்கடி கருத்தாடு, மழவன் சேரம்பாடி, கோட்டப்பாடி, மூலக்கடை, பாதிரிமூலா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, உலா வருகின்றன. பகல் நேரங்களில் கிராமங்கள் மற்றும் சாலைகளை ஒட்டிய புதர் பகுதியில், ஓய்வு எடுக்கும் இந்த இரண்டு யானைகளும் இரவு, 7:00 மணிக்கு மேல், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்க முற்படுவது; குடியிருப்புகளை இடிப்பது; விவசாய பயிர்களை நாசப்படுத்துவது,' என, பிரச்னைகளை அதிகப்படுத்தி வருகின்றன. பொது மக்கள் கூறுகையில், 'கடந்த வாரம் கருத்தாடு பகுதியில் இரவில் பழங்குடியின மக்களும், மதியம் பைக்கில் சென்ற ஒருவரும் இந்த யானையிடம் உயிர் தப்பினர். மேலும். இரவு நேரங்களில் கடைவீதிகளில் புகுந்து, கடைகளை உடைக்க முற்படுவதும் தொடர்கிறது. இந்த இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் துரத்த வந்த, கும்கிகள் ஓய்வு எடுத்ததுடன் முதுமலைக்கு திரும்பி சென்றன. எனவே, வனத்துறை உயரதிகாரிகள், இந்த யானைகளால் மனித உயிர்கள் பலியாவதற்கு முன்பு, கும்கி யானைகளை கூடுதலாக வரவழைத்து, அடர்த்தியான வன பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.