| ADDED : பிப் 12, 2024 01:33 AM
கோத்தகிரி;கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கட்டபெட்டு பாரதிநகர் கிராமத்தில், 50 ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கோத்தகிரி - குன்னுார் முக்கிய சாலையில் இருந்து, மிகவும் செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு, சாலை வசதி இல்லை. நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் செங்குத்தான ஒத்தையடி பாதையில் சிரமத்திற்கு இடையே சென்று வந்தனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, கிராம மக்களுக்கு சவாலாக இருந்து வந்தது. 'கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, கடந்த, 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். தற்போதைய, ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்த ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள், தனியாருக்கு சொந்தமான சிறிய நிலத்தை உரிமையாளரிடம் பேசி வாங்கியதுடன், 15வது நிதிக்குழுமானியம் மற்றும் பொது நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார்.தற்போது, ஒத்தையடி பாதை விரிவு படுத்தப்பட்டு,'கான்கிரீட்' சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிராம மக்கள் கூறுகையில்,' 50 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டோம். இப்பணி நிறைவடையும் பட்சத்தில், நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என்பதால், விழா நடத்தி கொண்டாட முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.