உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்வையாளர்களை கவரும் பழங்குடியினர் காதோலை; இளைய சமுதாயத்திடம் மறக்கப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கம்

பார்வையாளர்களை கவரும் பழங்குடியினர் காதோலை; இளைய சமுதாயத்திடம் மறக்கப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கம்

பந்தலுார்; கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும், காதோலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், மண்ணின் மைந்தர்களான குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் உடை மற்றும் காதணிகள், ஆபரணங்கள் சாதாரண மக்கள் அணிவதை விட வித்தியாசமாக இருக்கும். அதில், காதோலை எனப்படும் காதணிகள் அணிவதில் வயது முதிர்ந்த பழங்குடி இன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதி வயல்வெளிகளில் இயற்கையாக கிடைக்கும், 'தாழம்செடி' இலைகளை பறித்து அதனை முறையாக பதப்படுத்தி, வட்ட வடிவிலான காதோலையை உருவாக்குகின்றனர். இதன் வெளிப்பகுதிகளில் மெழுகு பூசி தனியாகவும், வனப்பகுதிகளில் கிடைக்கும் சிவப்பு நிற காய்களை ஒட்ட வைத்தும் பயன்படுத்தி வருகின்றனர். காதின் சிறிய துளைகளில் வைக்கப்படும் இந்த காதோலைகள், பெரிய அளவில் வட்ட வடிவமாக மாறி அழகாக காட்சி தருகிறது. இளைய தலைமுறையினர் நாகரிக மாற்றத்தால், தங்கம் மற்றும் கவரிங் நகைகளை அணிந்து வரும் நிலையில், மூதாட்டிகள் பழமை மாறாமல் அணிந்து வரும் காதோலை கலாசாரம் அழிவின் பிடியில் உள்ளது. பழங்குடியினர் சங்க நிர்வாகி சந்திரன் கூறுகையில், ''நாகரீக மாற்றத்தால் குடியிருப்பு, உடை, கலாசாரம் போன்றவற்றை எங்கள் சமுதாய மக்கள் படிப்படியாக மறந்து, மாற்றி வருகின்றனர். இதற்கு இளைய தலைமுறைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கால் பதித்து வருவது ஒரு காரணமாக இருந்தாலும், மதமாற்றமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால், பழங்குடியின கிராமங்களில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை