உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தீர்வு கிடைக்காத குப்பை பிரச்னை

 தீர்வு கிடைக்காத குப்பை பிரச்னை

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில், குப்பை கொட்ட இடம் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சியில், 15 வார்டுகள் அமைந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் அகற்றப்பட்ட குப்பைகள், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில் நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் வனப்பகுதியில் கொட்டப்பட்டது. அந்த பகுதி யானை மற்றும் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும் இடமாக உள்ளதால், இங்கு குப்பை கொட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து குப்பைகளை அகற்றினர். எனினும், இந்தப்பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை காவலர்கள், அந்தந்த பகுதியில் குப்பைகளை சேகரித்து எரிப்பதால், அதிலிருந்து எழும் புகை சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மேலும், இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் உணவு தேடி, குப்பைகளை சாலையில் தள்ளுவதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட உப்பு போன்ற உணவு வைத்திருந்த கழிவுகளை, வனவிலங்குகள் உட்கொள்வதால் விலங்குகளும் பாதிக்கப்படுகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் எஸ்டேட் கட்டுப்பாட்டில், ஒதுக்குப்புறமான இடங்கள் அதிக அளவில் உள்ள நிலையில், அவற்றில் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால், குப்பையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஆனால், இதில், ஆர்வம் காட்டாமல் ஊராட்சி நிர்வாகம் இருப்பதால், பல்லாயிரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்க, இடத்தை தேர்வு செய்ய ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்,' என்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில்,'' ஊராட்சி நிர்வாகத்துடன், தனியார் அமைப்பு இணைந்து, கழிவு மேலாண்மை திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை