உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் தண்ணீர் இருக்கு... ஆனா இல்ல...! கண்டுகொள்ளாத நகராட்சியால் மக்கள் அவதி

கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் தண்ணீர் இருக்கு... ஆனா இல்ல...! கண்டுகொள்ளாத நகராட்சியால் மக்கள் அவதி

பந்தலுார் : பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில், போதிய அளவு தண்ணீர் வசதி இருந்தும், முறையாக வினியோகம் செய்ய, நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூவமூலா பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதன் அருகே கபினி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பொன்னானி ஆற்றின் நீர் சுனைகள் அதிகளவில் உள்ளன. -இதன் ஒரு பகுதி பொன்னானி ஆற்றின் துவக்கமாகவும், மறு பகுதி பாண்டியாறு புன்னம்புலா ஆற்றின் துவக்க பகுதியாகவும் உள்ளது. இதனால், இந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லாமல் உள்ளது. அதில், பழங்குடியினர் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், நெல்லியாளம் நகராட்சி மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சதுப்பு நில பகுதியில் கிணறு அமைக்கப்பட்டது.

-மோட்டார் அமைத்தும் பயன் இல்லை

--தொடர்ந்து மோட்டார் அறை அமைத்து, டீசல் மோட்டார் வைத்து குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டது. ஆனால், டீசல் மோட்டார் அடிக்கடி பழுதடைந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து நகராட்சி மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, சிறிய கிணற்றில் மின் மோட்டார் வைக்கப்பட்டது. ஆனால், அங்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருந்ததால், இணைப்புகள் அனைத்தும் பழுதடைந்தும் உடைந்து காணப்படுகிறது. இதனால், கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.

- விரயமாகும் மின் கட்டணம்

--மின் இணைப்பு கொடுத்து, மோட்டார் வைத்து பல மாதங்கள் கடந்தும், மின் கட்டணத்தை மட்டும் செலுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருவது குறித்து, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலமுறை நிர்வாக அதிகாரிகளிடம் நேரில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. -இதனால், வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும், பழங்குடியின மக்கள் கிணற்றுக்கு சென்று, தலை சுமையாக தண்ணீரை எடுத்து வர வேண்டிய நிலை தொடர்கிறது.

--தலைசுமை பழகி போச்சு

கிராம மக்கள் கூறுகையில், 'கிணறு அமைத்து மோட்டார் இணைப்பு கொடுக்காத காலத்தில், எப்படி தலை சுமையாக தண்ணீரை சுமந்து வந்ததை போல, தற்போது மோட்டார் இணைப்பு கொடுத்தும் தண்ணீரை சுமந்து வருகிறோம். -கிராமத்தை ஒட்டிய பகுதியில் அதிகளவு தண்ணீர் இருந்தும், அதனால் எங்களுக்கு பயன் இல்லாத நிலை தொடர்கிறது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, இரவு நேரங்களில் யானை,புலி மற்றும் சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் நடமாடும் இடத்தில், அச்சத்துடன் தண்ணீரை சுமந்து வருகிறோம். யாரை நம்பியும் பயனில்லை. அதிகாரிகளும் எங்களை மதிப்பதே இல்லை. தலைசுமை என்பது பழகி போச்சு,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ