மேலும் செய்திகள்
கன்று குட்டியை தாக்கி கொன்ற புலியால் அச்சம்
26-Jul-2025
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, 10 மாடுகளை தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள, சர்கார்மூலா ஒட்டியுள்ள தனியார் எஸ்டேட் பகுதியில், கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் புலி இதுவரை, 10 வளர்ப்பு மாடுகளை தாக்கி கொன்றது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலி தாக்கி எருமை பலி இந்நிலையில், நேற்று முன்தினம், தேயிலை தோட்ட பகுதியில் ஆலி என்பவர் ஐந்து எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டு கண்காணித்தார். திடீரென, அப்பகுதிக்கு வந்த புலி, எருமைகளை விரட்டி சென்றது. புலியை பார்த்த ஆலி அலறி அடித்து ஓடியுள்ளார். சிறிது நேரத்தில் ஐந்தில், ஒரு எருமையை காணவில்லை. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்த போது, எருமை புலி தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அப் பகுதியில் தானியங்கி கேமராக்கள் வைத்து, வன உழியர்கள் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களில், 10 மாடுகளை புலி தாக்கிக் கொன்ற சம்பவத்தால், கிராம மக்கள் அவசர தேவைக்கு கூட நடமாட முடியாத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் ஆய்வு அப்பகுதியை, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் மாரிமுத்து, வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை சந்தித்த மக்கள், 'மாடுகளை தாக்கி வரும் புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும். தனியார் எஸ்டேட் பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தினர். அரசு அதிகாரிகள் கூறுகையில்,'புதர்களை அகற்றுவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலியை பிடிக்க ஓரிரு நாட்களில் கூண்டு வைக்க ஆலோசனை நடத்தப்படும். எனவே, மக் கள் தனியாக இப்பகுதிகளில் உலா வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இந்த தகவல்கள் குறித்து, ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.
கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மாமிச உண்ணி தாக்கி மாடுகள் இறந்த பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில், இதுவரை எந்த போட்டோவும் பதிவாகவில்லை. கேமராவில் பதிவாகும் படத்தின் அடிப்படையில், மாட்டை தாக்கி கொன்ற மாமிச உண்ணி எது, என்பது குறித்து உறுதி செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அப்பகுதியில் முதுமலை புலிகள் காப்பக சிறப்பு குழுவினர் உதவியுடன் கண்காணிப்பு பணியே தீவிரப்படுத்தி உள்ளோம். அப்பகுதிகளில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும், என, ஒலிபெருக்கி மூலம், பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறோம். வனத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றனர்.
26-Jul-2025