கவச உடை அணிந்து புலியை தேடும் பணி
கூடலுார்; கூடலுார் அருகே பசு மாடுகளை தாக்கி கொன்ற புலியை வன ஊழியர்கள் கவச உடை அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். கூடலுார் தேவர்சோலை பாடந்துறை சுற்றுவட்டார பகுதியில் உலா வரும், 3 வயது ஆண் புலி கடந்த சில மாதங்களில், 20 மாடுகளை தாக்கி கொன்றது. கடந்த, 8ம் தேதி முதல் அப்பகுதியில் கூண்டு வைத்து அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில், 35 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நான்கு இடங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். 30 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். எனினும், புலி இதுவரை கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில், 4ம் நாளான நேற்று வன ஊழியர்கள், கவச உடை அணிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'மாடுகளை தாக்கி கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை புலி சிக்கவில்லை. தற்போது புலி நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதியில், வன ஊழியர்கள் கவச உடையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் புலி கூண்டில் சிக்கும்,' என்றனர்.