பகலில் சாலையில் உலா வரும் புலி: வனத்துறை எச்சரிக்கை
கூடலுார்; 'முதுமலை மசினகுடி -மாயாறு சாலையை, பகல் நேரத்தில் புலிகள் அடிக்கடி கடந்து சென்று வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்ட பகுதி சாலையோரங்களில் வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இவைகள், உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. 'சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் யானை, காட்டெருமை, புலி, கரடி போன்ற விலங்குகள் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சிலர் வனவிலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். ரோந்து பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், மசினகுடி- மாயாறு சாலையை ஒட்டி உலா வரும் புலி, இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் சாலையை கடந்து செல்கிறது. இதனால், ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் பயணிக்க வலியுறுத்தி உள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'பகல் நேரங்களிலும், சாலையை கடந்து செல்லும் புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இவ்வழியாக வாகனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மீறி இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர்.