கட்டபெட்டு வழியாக மரம் கடத்தல்; இரவு நேரத்தில் தொடரும் அத்துமீறல்
கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, நிழலுக்காக ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்களை நடவு செய்து, விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். மரங்களின் கிளைகள் விறகுக்காக பயன்படுத்தப்படுகிறது.முதிர்ந்த மரங்கள் வனத்துறை மற்றும் வருவாய் துறை அனுமதி பெற்று விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக வனத்துறையின் விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் வெட்டப் படுவது தொடர்கிறது.குறிப்பாக, கட்டபெட்டு மற்றும் ஊட்டி வடக்கு வனச்சரகங்களுக்கு உட்பட்ட, கிராமப்புறங்களில் வெட்டபட்டு, கெந்தொரை, தும்மனட்டி, கக்குச்சி, டி.மணியட்டி மற்றும் பில்லிக்கம்பை சாலைகளில் நிறுத்தி, கட்டபெட்டு வழியாக, கடத்தப் படுவது அதிகரித்துள்ளது.கூப்பில் வெட்டப்படும் மரங்களை தவிர, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் சில்வர் ஓக் அல்லாத மரங்களும் வெட்டப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுவதாக புகாரும் எழுந்துள்ளது.மலை மாவட்ட விவசாய சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''மரங்கள் வெட்டுவதற்கு, முறையான அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில், சாலை ஓரத்தில் மர லோடு லாரிகளை மறைத்து வைத்து இரவு, 9:00 மணிக்கு மேல், தார்பாலின் போர்த்தி மறைத்து, கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதை, அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.உள்ளூர் மக்கள் கூறுகையில், ''இதே நிலை நீடித்தால், மரங்கள் இல்லாத பொட்டல் காடாக கோத்தகிரி மாற வாய்ப்பு அதிகம் உள்ளதால், உயர் அதிகாரிகள் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.