நேர மேலாண்மை மாணவர்களுக்கு முக்கியம்; சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில், சர்வதேச பட்டு ஆணைய பொதுச் செயலாளர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:கூடலுார் அருகே நாடுகாணி பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே படித்து, விடா முயற்சியால் மட்டுமே என்னால், வனப்பணியில் சேர முடிந்தது. இன்றைய இளைய தலைமுறையினர் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது கிடையாது. தினசரி மாணவர்கள் தங்களது செயல்பாடுகளை, 'டைரி' வடிவில் எழுதி நேரத்தை வீணான வழியில் செலவிடாமல், தற்போதைய பள்ளி பாடங்களை படிப்பது மற்றும் எதிர்கால தேர்வுகளுக்கான பாடங்களை தேர்வு செய்வது போன்றவற்றில் முனைப்பு காட்ட வேண்டும். குடும்பங்களில் பிரச்னைகள் உருவாகும் அதனை கண்டுகொள்ளாமல், இலக்கு எதுவோ அதை நோக்கி பயணிக்க பழக வேண்டும். போட்டி தேர்வுகளில் படிப்பதற்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை கூச்சமின்றி கேட்டு தெரிந்து கொள்வதுடன், பொது இடங்களில் பேசுவதற்கு தயக்கம் கட்டாமல் இருந்தால் மட்டுமே நல்ல நிலைக்கு உயர முடியும். எனவே, கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்கு உதவிகள் செய்ய அனைவரும் தயார் நிலையில் உள்ளதுடன், வழி காட்டவும் தயாராக உள்ளோம். அதனை பயன்படுத்தி வாழ்வில் மேம்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அரசு பொது தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பள்ளி வளர்ச்சிக்காக முதல் கட்டமாக, 25 ஆயிரம் ரூபாய் பண உதவி வழங்கினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ஜெயசீலன், கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், தனியார் பள்ளி ஆசிரியர் சபரீசன், கவுன்சிலர்கள் ஆலன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.