கனமழையால் தொடரும் பேரிடர் தவிர்க்க... கைகோர்ப்பு: கண்காணிப்பு பணியில் மண்டல குழுக்கள்
தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய ஊழியர்கள், போலீசார், தன்னார்வலர்கள் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது, குன்னுார் பகுதிகளில் பேரிடரால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அக். - நவ., மாதங்களில் பெய்யும் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுவதுடன், நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படுகிறது. குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் 107 இடங்கள், பேரிடர் பாதிப்பு அபாயம் உள்ள பகுதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. குன்னுார் - - கோத்தகிரி சாலை வண்டிச்சோலை தனியார் கல்லூரி அருகே அதிகாலை 4:00 மணியளவில் ராட்சத மரம் விழுந் தது. மின்கம்பிகள் மீது சாய்ந்ததால், 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. சீரமைப்பு பணி நிறைவு பெற்று, 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. பால் பாக்கெட்கள் ஏற்றி சென்ற பிக்-அப் வாகனம் மற்றும் அம்பிகாபுரம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மாருதி கார் மீது மரங்கள் விழுந்ததால், லேசான சேதம் அடைந்தன. ஊட்டி- குன்னுார் சாலை பிருந்தாவன், பாரஸ்ட் டேல் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்தன.கேத்தியில் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. இரவில் கொட்டி தீர்க்கும் கன மழையால், பேரிடர் அபாயத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய ஊழியர்கள், போலீசார், தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கமாண்டோ
படை தயார்
பேரிடர் பாதிப்புகளை எதிர் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட, மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில், 20 சிறப்பு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மண்டல குழுக்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு, நெடுஞ்சாலை, வருவாய், சுகாதார துறையினர் என அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.
அதிகபட்ச மழை
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியில் இருந்து அதிகாலை 5:30 மணி வரை, இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, கோத்தகிரியில் 13.7 செ.மீ., எடப்பள்ளியில் 7.2 செ.மீ., பர்லியாரில், 9.2 செ.மீ., குன்னுாரில் 5.3 செ.மீ., மழை பதிவானது.